வேர்டில் பல டாகுமெண்ட்களை ஏற்படுத்துகிறோம். சில வேளைகளில் ஒன்றில் ஒரு பொருள் பற்றி எழுதுகையில் இன்னொரு கட்டுரையில் இதனைப் பற்றியும் ஒரு முக்கிய குறிப்பினை எழுதியுள்ளோமே என்று
எண்ணலாம். இதனைப் படிக்கும்போது அதனையும் படித்து வைத்தால் நல்லது என்று திட்டமிடலாம். அல்லது ஒரு டாகுமெண்ட்டில் சொன்னதை ஏன் மறுபடியும் எழுத வேண்டும். படிப்பவர்கள் அங்கும் சென்று படித்துக் கொள்ளட்டும் என்றும் எண்ணலாம்.
இந்த எண்ணத்தைச் செயல்படுத்த வேர்ட் வசதி ஏற்படுத்தியுள்ளது. ஒரு டாகுமெண்ட்டுக்கும் இன்னொன்றுக்குமான தொடர்பினை அந்த டாகுமெண்ட்டிலேயே ஏற்படுத்தலாம். இதனை ஹைபர் லிங்க் என்று சொல்கிறோம்.
இதனை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். முதலில் நீங்கள் தொடர்புபடுத்த விரும்பும் இரு டாகுமெண்ட்களையும் திறந்து கொள்ளவும். பின் Window மெனு சென்று அதில் Arrange All என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். இப்போது அடுத்த அடுத்த விண்டோக்களில் இரண்டு டாகுமெண்ட்களும் திறக்கப்பட்டிருக்கும். இனி முதல் டாகுமெண்ட்டில் குறிப்பிட்ட பொருள் தொடர்புக்கான அடிப்படை சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின் இதனை ரைட் கிளிக் செய்து அடுத்த டாகுமெண்ட்டில் எந்த இடத்தில் வாசகர் முந்தைய டாகுமெண்ட்டினைத் தொடர்பு கொள்ள வேண்டுமோ, அந்த வாக்கியத்தின் கடைசி சொல்லுக்குப் பக்கத்தில் விட்டுவிடவும். பின் இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Create Hyperlink என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி வாசகர்கள் இரண்டாவது டாகுமெண்ட்டைப் படிக்கையில் இந்த இடத்திற்கு வந்தவுடன் அங்கு ஹைப்பர் லிங்க் இருப்பதற்கான அடையாளம் தெரியும். அந்த இடத்தில் கண்ட்ரோல் அழுத்தி கிளிக் செய்தால் உடனே முந்தைய டாகுமெண்ட் திறக்கப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் கர்சர் நிற்கும். இந்த இரு டாகுமெண்ட்களையும் நீங்கள் இணைய தளத்தில் பதிக்க விரும்பினால் இரண்டும் ஒரே போல்டரில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மவுஸ் மூலம் டெக்ஸ்ட் தேர்வு
வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட் முழுவதையும் ஒரே மவுஸ் கிளிக்கில் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு மவுஸ் பாய்ண்ட்டரை இடது பக்கம் உள்ள மார்ஜின் ஓரத்திற்குக் கொண்டு செல்லவும். அது வலது பக்கம் சற்று சாய்ந்த மேல் நோக்கிய அம்புக் குறியாக மாறும். உடன் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொள்ளுங்கள். பின் இடது மவுஸ் பட்டனை அழுத்துங்கள். டாகுமெண்ட் முழுவதும், அது எத்தனை பக்கங்களாக இருந்தாலும் உடனே செலக்ட் செய்யப்படும்.
இதனை இன்னொரு வழியிலும் நிறைவேற்றலாம். அம்புக் குறியை இடது ஓரத்திற்குக் கொண்டு சென்றவுடன் மூன்று முறை இடது மவுஸ் கிளிக் செய்திடவும். டாகுமெண்ட் முழுவதும் செலக்ட் ஆகி நிற்கும்.
திரை டெக்ஸ்ட் மாறாத செயல்பாடு
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத் திற்கு மட்டுமே செல்லும்.
Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத் தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!
டாகுமெண்ட் ஸூம்
டாகுமெண்ட் வழக்கமாக 100% அளவில் திரையில் காட்டப்படும். சில காரணங்களுக்காக அதனைச் சுருக்கிப் பார்க்க விரும்புவோம். அப்போது மேலே மெனு பாரில் உள்ள கட்டத்தில் 100% என்பதனை 75% என மாற்றலாம். பெரிதாகத் தெரிய, ஸூம் இன் செய்திட வேண்டும் என்றால் இதனை 100க்கு மேலாக அதிகப்படுத்தலாம்.
இந்த ஸூம் செய்வதற்கு மவுஸ் மூலமாக இன்னொரு வழியும் உள்ளது. கர்சரை டாகுமெண்ட்டில் வைத்துக் கொண்டு கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு அதில் உள்ள சிறிய வீலை முன்னே பின்னே நகர்த்தவும். ஒரு சிறிய நகர்த்தலுக்கு அது நகர்த்தப்படும் திசையைப் பொறுத்து 10% அதிகமாகும் அல்லது குறையும்.

0 comments:
Post a Comment