அறிவியல் மற்றும் அறிவியல் தொடர்பான விஷயங்களை மொபைல் போன்களில் இலவசமாக பகிர்ந்துகொள்ளும் Free SMS வசதியை இக்னோவும், விஞ்யான் பிரசாரும் இணைந்து நிறுவியுள்ளன.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, அறிவியல் மையத்தில் நடைபெற்ற 2 நாள் கொண்டாட்டத்தில் Science@Mobile என்ற பயன்பாடு நிறுவப்பட்டது. தேசிய அறிவியல் தினமானது, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. நோபல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் தனது ராமன் விளைவு கண்டுபிடிப்பை அறிவித்த தினம் இந்த பிப்ரவரி 28.
அறிவியலை ஏற்றுக் கொள்ளாமல் மற்றும் அறிவியல் அறிவைப் பெறாமல் இருக்கும் எந்தவொரு சமூகமும் நிறைவடைய இயலாது. அறிவியல் இல்லாத வாழ்வு இருண்ட வாழ்வேயாகும். எனவேதான், அறிவியலை அனைத்து வழிகளிலும் பரப்புவது இன்றியமையாததாகிறது.
நாட்டிலுள்ள மொபைல் போன்களின் எண்ணிக்கை எங்கோ சென்றுவிட்டது. மொபைல் போன்கள் நுழையாத இடமேயில்லை. எனவே, அறிவியலைப் பரப்புவதற்கு மொபைல் போன்கள் சிறந்த சாதனங்கள். தற்போது, கிராமங்களிலும் மொபைல் போன்களின் ஊடுருவல் மிக அதிகம் என்பதால், இப்பணியை எளிதாக மேற்கொள்ளலாம்.
Science@Mobile சேவையானது, அறிவியல் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தருவதோடு, செய்திகள், முக்கிய நாட்கள் மற்றும் சம்பவங்கள், உண்மைகள், நகைச்சுவை, குறிப்புகள், விஞ்ஞானிகள் பற்றிய செய்திகள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் பசுமைக் குறிப்புகள் ஆகியவற்றை அதன் சந்தாதாரர்களுக்கு இலவசமாக தருகிறது.
இந்த சேவையின் உள்ளடக்கமானது 3 வகைகளாக உள்ளன. எந்த அறிவியல் பின்புலமும் இல்லாத மக்கள், அடிப்படை அறிவியல் அறிவுள்ள மக்கள் மற்றும் அறிவியல் பின்புலமுள்ள மக்கள் என்பவைதான் அவை.
பயன்பாட்டாளர்கள், SCIMBL என்று டைப் செய்து 092230516161 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி சந்தாதாரர் ஆகலாம் அல்லது விஞ்யான் பிரசார் இணையதளத்திலுள்ள இணைப்பை கிளிக் செய்யலாம்.
இந்த சேவை தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. அதை, விரைவில், இந்தியில் வழங்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. மேலும், பல மாநில மொழிகளிலும் அந்த சேவையை வழங்க, மாநில ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
விஞ்யான் பிரசார் என்பது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு.

0 comments:
Post a Comment